திருச்சி மாவட்டம், முசிறியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் சாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏழு வயது மாணவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவன் தினமும் பள்ளி பேருந்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அந்த மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ஆசிரியர்கள் அந்த மாணவனை வகுப்புக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமரவைத்துவிட்டு, அவரின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம், ‘மாணவன் இன்னும் பேருந்து கட்டணம் செலுத்தாததால் பேருந்தில் ஏற்றமுடியாது’ என்று கூறியுள்ளனர். அப்போது, மாணவனின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பள்ளி நிர்வாகம், பெற்றோரை ஒருமையில் பேசியுள்ளது. அதன் பிறகு மாணவனின் மாற்றுச் சான்றிதழை தூக்கி வீசியுள்ளது.
இந்தச் சம்பவம் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் நக்கீரன் விசாரணை நடத்தியது. அதன் பிறகு முழு விவரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் எடுத்து சென்றோம். விவரத்தை முழுமையாக கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிச்சயம் முழு விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் உடனடியாக திருச்சி மாவட்டப் பள்ளிக் கல்வி அதிகாரிக்கு (சி.இ.ஓ) இந்த விவகாரத்தைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அமைச்சரின் உத்தரவை அடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு திருச்சி மாவட்ட சி.இ.ஓ சென்று விசாரணை மேற்கொண்டு பள்ளி நிர்வாகத்தை எச்சரித்தார். மேலும், அந்த மாணவனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கவும், மாணவனை பள்ளி வாகனத்தில் வர அனுமதிக்கவும், பெற்றோருக்கு வேறு வழியில் எந்தப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார்.
மாவட்ட சி.இ.ஓ.வின் உத்தரவை அடுத்து பள்ளி நிர்வாகம், ‘மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் கொடுத்தது தவறு என்று ஒப்புக்கொண்டது. பள்ளி நிர்வாகம் மாணவனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இப்பள்ளியில் தொடர்ந்து பயில முழுமையாக சம்மதிக்கிறது. வழக்கம்போல் சாலப்பட்டிக்கு பள்ளி வாகனம் அனுப்பப்படும்.
மாணவனின் பெற்றோர் இனி எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்போம் என உறுதியளித்தனர்’ என்று தங்களது மன்னிப்பு அறிக்கையில் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவனின் தாய் கலைச்செல்வி கூறுகையில் பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து வருகின்ற திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் மாணவன் பள்ளிக்கு வரலாம் என்று உறுதியளித்துள்ளது என்று தெரிவித்தார்.