சென்னை ஜமீன் பல்லாவரம் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிற்கு செல்கின்றனர். வழக்கமாக தனியார் பள்ளி தான் இது போன்ற போட்டிகளில் தேர்வாகும் ஆனால், அரசு பள்ளி தேர்வாவது இதுவே முதல்முறை ஆகும்.
சென்னை மன்னிவாக்கம் பகுதியில் நடந்த மாவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டில் 6 - 0 என்ற கணக்கில் ஜமீன் பல்லாவரம் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் அணி வெற்றி பெற்றது. இதில் சின்ராசு என்ற விளையாட்டு வீரர் மாநில அளவிலான இந்திய பள்ளி விளையாட்டுக்கள் கூட்டமைப்பில் (students games federation of india) விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளளார். அதேபோல், அதே பள்ளியை சார்ந்த சந்தியா என்ற மாணவி ஹாக்கியை சார்ந்த ஃப்ளோர் பால் என்ற விளையாட்டை விளையாட தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை ஜோனி மேபல் கூறும்போது,
பெரும்பான்மையான அரசு பள்ளியில் ஹாக்கி விளையாட்டு மோகம் குறைவாகவே காணப்படும். அப்படியே விளையாட விருப்பமுள்ள மாணவர்களுக்கு தகுந்த விளையாட்டு திடல் கிடையாது. அதேப்போல் தான் எங்கள் மாணவர்களுக்கும் ஹாக்கி விளையாட்டு திடல் கிடையாது. பயிற்சிக்காக 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்லாவரத்தை அடுத்த கவிதா பண்ணை அருகே உள்ள அம்பேத்கார் விளையாட்டு திடலில் தினமும் பயிற்சிக்காக மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டு பயிற்சி பெறுவார்கள்.
மேலும், பெண் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அவர்களின் பெற்றோரின் அனுமதியுடன் இந்த விளையாட்டு திடலில் அழைத்துச் செல்ப்பட்டு பயிற்சி மேற்கொள்வர். அடித்தட்டு மாணவர்களே பெரும்பாலும் இதில் பங்கேற்றுள்ளனர் என்பதால் ஹாக்கி விளையாடும் உபகரணங்கள் கூட அவர்களிடம் இல்லை. அதேப்போல் சில மாணவர்கள் ஷூக்கள் கூட இல்லாமல் வெறும் கால்களுடன் அவர்களின் கடின முயற்சியால் இந்த வெற்றியை கண்டுள்ளனர். மேற்படி வரும் போட்டியிலும் நிச்சயம் இவர்கள் வெற்றி பெறுவார்கள்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லீலா பாய் கூறும்போது, எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர், எழ்மை நிலையில் இருந்தாலும் எந்த ஒரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல் விளையாட்டில் பங்கு பெற்று வெற்றியை கண்டுள்ளனர். இதுபோன்ற விளையாட்டில் மாணவர்களை ஊக்குவிப்பதால் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாகும்.
நம் நாட்டுக்காக பதக்கங்களை வென்று வரும் வீரர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அதிலும் உடற்கல்வி ஆசிரியர் தனிக்கவனம் செலுத்தி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இதற்காக அவர்களுக்கென ஒதுக்குகிறார். இதுபோன்ற ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் என் பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்தார்.