கோவை மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள வின்சென்ட் சாலைப் பகுதியில்.. சிட்டி பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, கோட்டைமேடு பள்ளி என மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் கோவை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே, இந்த மூன்று பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குள் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக சொல்லப்படுகிறது.
காலையில் பள்ளிக்கு செல்லும் நேரத்திலும் மாலையில் வீடு திரும்பும் சமயத்திலும் மாணவர்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கின்றனர். அதில், மாநகராட்சி பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்ட சிட்டி பள்ளி மாணவர் தன் ஊருக்குள் இருக்கும் நண்பர்களை அழைத்து வந்து.. தன்னை தாக்கியவர்களை திருப்பி அடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் வின்சென்ட் சாலையில் உள்ள சந்துப் பகுதியில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த மாணவர்களைத் தடுக்க முயற்சித்தனர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில், அங்கிருந்த நபர் ஒருவர் பள்ளி சீருடையில் சண்டை போட்டுக்கொண்டிருந்த மாணவர்களை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கியுள்ளார். இதைப் பார்த்ததும்.. அவர் தங்களைப் போலீசில் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து கலைந்துச் சென்றனர். பின்னர், இது குறித்து உக்கடம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ஸ்பாட்டுக்கு வந்த போலீசார்.. இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். தற்போது, இது சம்மந்தமான வீடியோ சோசியல் மீடியா உள்ளிட்ட தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், இங்குப் படிக்கும் ஒரு சில மாணவ - மாணவிகள் சமீப காலமாக பல்வேறு தவறுகளை செய்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது போதையில் இருந்த பள்ளி மாணவி ஒருவர் நடுரோட்டில் படுத்து தூங்கியதும் பள்ளி சீருடையில் மது வாங்க சென்றதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல், பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் காதல் விவகாரம், போதைப் பழக்கம், சாதி சண்டை போன்ற பிரச்சனைகளால் பேருந்து நிலையம், பள்ளிக்கு அருகில் உள்ள பேக்கரி கடைகள் போன்ற பகுதிகளில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
இது சம்மந்தமான விஷயங்களில் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை அரசு மற்றும் காவல் துறையினரும் கருத்தில் கொண்டு உரிய விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்கால சமுதாயத்தைப் பாதுகாக்க முடியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.