கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பணிக்கம்பட்டியில் இருந்து அய்யர்மலை மற்றும் குளித்தலையில் உள்ள அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அதிகளவில் உள்ளனர். முன்பு பள்ளி வேலைநாட்களில் 2 முதல் 3 அரசு பேருந்துகள் வந்து சென்ற நிலையில் தற்போது ஒரு அரசு பேருந்து மட்டுமே இயங்கி வருகிறது.
இந்த அரசு பேருந்தில் பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, ஈச்சம்பட்டி சிவாயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், 100-க்கும் மேற்பட்ட வேலைக்கு செல்பவர்கள் வந்து செல்கின்றனர். ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் அந்த பேருந்தில் அதிகளவில் கூட்டம் வருவதால் அய்யனூர் பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பேருந்தில் ஏற முடியாமலும், படிக்கட்டுகளில் தொங்கி உயிருக்கு ஆபத்தான நிலையிலும் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பணிக்கம்பட்டியிலிருந்து வந்த அரசு பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் ஏறுவதற்கு கூட இடமில்லாமல் தவித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்தின் முன்பு பணிக்கம்பட்டி - அய்யர்மலை சாலையின் குறுக்கே அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த குளித்தலை போலீசார் பள்ளி மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தினந்தோறும் தாங்கள் பஸ் படிக்கட்டில் தொங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை கோரிக்கை அளித்தும் போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். போலீசார் அவர்களிடம் உங்களுக்கு உரிய அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தருகிறோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பணிக்கம்பட்டி - அய்யர்மலை சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.