Skip to main content

குழந்தைகள் தினத்தில் அரசுப் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்!

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

School student passes away in school campus in puthkottai

 

பள்ளி முடிந்து வகுப்பறையில் இருந்து வீட்டிற்குச் செல்ல புத்தகப் பையுடன் வெளியே வந்த அரசுப் பள்ளி 9ம் வகுப்பு மாணவன் வராண்டாவில் மயங்கிச் சரிந்த சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள மேல்மங்கலம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியன் மகன் மாரிமுத்து (வயது 14). பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நன்றாகப் படிக்கும் மாணவன். தீபாவளி விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வந்தபோது பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி களித்தனர்.

 

மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் புத்தகப் பையோடு வீட்டிற்குக் கிளம்பும்போது மாணவன் மாரிமுத்துவும் தனது நண்பனோடு புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து படியில் இறங்கும் முன்பே திடீரென மயங்கி கீழே சாய, முன்னால் சென்ற மாணவன் வேகமாக வந்து பார்த்துவிட்டு ஆசிரியர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவனைத் தூக்கிச் சென்று அவசரமாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

 

தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக ஆவுடையார்கோயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், பள்ளிக்குச் சென்ற போலீசார் மாணவனின் உறவினர்கள் முன்னிலையில் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சக மாணவனோடு புத்தகப் பையோடு வரும் மாரிமுத்து திடீரென கீழே சாயும் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

 

இந்தப் பள்ளியில் படித்த ஒரு மாணவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இப்போது ஒரு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இப்படி அடுத்தடுத்து மாணவர்கள் உயிரிழப்பு ஏற்படுவதால் பொதுமக்களும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடரும் மாணவர்கள் இறப்பு சம்பவங்களால் அங்கு பரபரப்பும் பதைபதைப்பும் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்