கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆராய ஜிப்மர் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் மூன்று பேர் அடங்கிய குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவில் சித்தார்த் தாஸ், குசாகுமார் சாஹா, அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்த அறிக்கையை மருத்துவர்கள் குழு ஒரு மாதத்தில் மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், உடலை நாளை (23/07/2022) பெற்றுக் கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், நாளை காலை 07.00 மணிக்குள் உடலைப் பெற்றுக் கொண்டு மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, பள்ளி மாணவி இறுதிச் சடங்கில் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்கலாம். மாணவியின் இறுதிச் சடங்கில் வெளியூர் நபர்கள், அமைப்புகள் கலந்துக் கொள்ளக் கூடாது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒலிபெருக்கி வாயிலாக இந்த அறிவுறுத்தல்களை காவல்துறை வழங்கியுள்ளது.
பள்ளி மாணவியின் இறுதிச் சடங்கு, அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம், பெரியநெசலூரில் நடைபெறவுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியநெசலூர் முழுவதும் 1,000- க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.