தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவரும் நிலையில், கடந்த செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நிலையில், கடந்த 15 நாட்களில் 80க்கும் அதிகமான மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்கும் பொருட்டு அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது. இது சம்பந்தமான மாவட்ட கல்வி அதிகாரிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை இன்று (16.09.2021) முதல்வரிடம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்தார். முதற்கட்டமாக 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களைப் பள்ளியில் அனுமதிக்கலாம் என்றும், பிறகு இரண்டு வாரங்கள் கழித்து சரியான சூழ்நிலைகள் அமைந்தால், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் அனுமதி அளிக்கலாம் என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.