பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டத்தின் பயிற்சிப் பணிமனை, விழிப்புணர்வு கலைப் பயணம் துவங்கப்பட்டது. இந்தப் பணியில் தன்னார்வலர்கள் மூலம் தினமும் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் என புதுமையான முறையில் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படும்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழு செயல்பட்டுவந்தது. இந்தப் பிரச்சாரக் குழுவில் ஒன்றான சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப்பயணம் குழு, பணி நேரத்தின்போது சீருடையுடன் டாஸ்மாக்கில் மது வாங்கி, பிரச்சாரப் பயணம் செய்யும் வாகனத்தில் ஏறிச் சென்ற வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நடந்துகொண்ட சர்மிளா ஷங்கர் தலைமையிலான கலைக்குழு பிரச்சாரப் பயணத்திலிருந்து முழுமையாக நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.