சென்னை – எண்ணூர் – பாரதி நகரில், தேவி கருமாரியம்மன் நர்சரி & பிரைமரி பள்ளியில் சுமார் 300 குழந்தைகள் வரை படித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில், சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவுகளெல்லாம் நடந்துள்ளன.
கரோனா காலம் என்பதால், தற்போது இந்தப் பள்ளி திறக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், இந்தப் பள்ளியின் கட்டிடத்தை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து, இடித்தும் விட்டனர். இதனைத் தொடர்ந்து, அந்த இடத்தை விற்பதற்கான முயற்சியில் சிலர் இறங்கியுள்ளதாக, எம்-5 எண்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
‘குழந்தைகளின் பெற்றோரான நாங்கள் போராட்டம் நடத்தியும் பலனில்லை. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், பள்ளிக் கட்டிடத்தை புல்டோசர் மூலம் இடித்துவிட்டனர். இனி பள்ளி மாணவர்களின் நிலை என்னவாகும்?’ என்ற பரிதவிப்புடன், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு, பெற்றோர் தரப்பில் புகார் அனுப்பியுள்ளனர்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதைத் தவிர வேறு தீர்வு இல்லை என்பதில் உறுதியாக இருந்து, அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கட்டிடத்தை இடித்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, நிவாரணம் தேட பெற்றோர்கள் தரப்பில் முடிவெடுத்துள்ளனர்.