கோப்புப்படம்
கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. ஆர்த்திராவ், லெனின், வினய் பரத்வாஜ் ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று (01.06.2018) தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய லெனின்,
சென்னை போலீசிடம் கடந்த 2010ல் தந்த புகார் கர்நாடக போலீசுக்கு அனுப்பப்பட்டதையடுத்து, கர்நாடகா சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து 2010 நவம்பரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து 2012 மற்றும் 2015ல் மறுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் நித்தியானந்தா உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த வழக்கில் மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க மறுத்தார் நித்தியானந்தா. மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. பின்னர் 2017ல் ஒரு பொய்யான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நித்தியானந்தா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாலியல் பலாத்கார வழக்கை எதிர்த்து ராம்நகர் மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை கடந்த பிப்ரவரியில் ராம்நகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனு கடந்த மே 16ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை நித்தியானந்தா மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
நித்தியானந்தாவின் மனுவை நீதிபதிகள் நாகேஸ்வரராவ், சந்தனகவுடர் ஆகியோர் தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கை விரைவாக விசாரிக்கவும் ஆணையிட்டனர். இந்த வழக்கில் நித்தியானந்தாவின் மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கறிஞர் அஷ்வின் வைஷ் ஆஜராகி வாதாடினார்.
உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ராம்நகர் நீதிமன்றத்தில் வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் விசாரணை தொடங்க உள்ளது என தெரிவித்தார்.