திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் சி.பி.எஸ்.சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார்(54) பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இது சம்பந்தமாக விசாரிக்க பள்ளிக்குச் சென்ற மாணவியின் பெற்றோரிடமும் பள்ளியின் தாளாளார் சுதா, ‘தனது கணவர் இன்னும் இரண்டு நாளில் வெளிநாடு சென்று விடுவார். இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்’ என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்த வசந்தகுமாரை கோவத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வசந்தகுமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாலியல் தொல்லை கொடுத்த வசந்தகுமார் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் தந்தை, உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்து அலுவலகத்தையும் சூறையாடினர். அங்கு நின்றிருந்த காரையும் சேதப்படுத்தினர்.
பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டிஜஜி வருண்குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், செல்வ நாகரெத்தினம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து நள்ளிரவில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மணப்பாறையில் நள்ளிரவு வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து திருச்சி எஸ்.பி. கூறியதாவது, “மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு சம்பந்தமாக 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியில் இதுபோன்று மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள் இனி நடைபெறாமல் தடுத்திட அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் இது ஒரு சம்பவம் தான் நடைபெற்றுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் குற்றச்சாட்டுகள் உள்ளதா? என்பது விசாரணையில்தான் தெரியவரும். மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.