தன்னுடைய பள்ளிச்சான்றிதழ் காணவில்லை என வயர்லெஸ் டவரில் ஏறிப் போராட்டத்தில் ஈடுப்பட்டார் வாலிபர் ஒருவர். காலையில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வடக்குதிட்டங்குளத்தினை சேர்ந்தவர் ஜோதி ரமேஷ். கூலி வேலை செய்து வரும் இவர் இன்று காலையில் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள காவல்துறைக்கு சொந்தமான 100 அடி உயரமுள்ள வயர்லெஸ் டவரில் திடீரென ஏறி, " தன்னுடைய பள்ளி சான்றிதழ் காணவில்லை. அதனை மீட்டும் தரும் வரை கீழே இறங்க போவதில்லை." எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். " நீ எங்க படிச்சே..? என்ன படிச்சே..? எப்ப காணாமல் போனது..? புகார் கொடுத்திருக்கிறாயா..?" என பல கேள்விகளைக் கேட்டு அவரிம் பேச்சுவார்த்தையை நடத்தினர் கோவில்பட்டி தாசில்தார் பரமசிவம் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர்.
பேச்சு வார்த்தைக்கு படிந்து கீழே இறங்கி வந்த ஜோதி ரமேஷை கைது செய்த கிழக்கு காவல் நிலைய காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். " இது முதன் முறையல்ல.! மூன்றாவது முறை. இவர் இதற்கு முன்னதாக காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாக கூறி சுபா நகரில் உள்ள தனியார் செல்போன் டவரில் போராட்டத்தில் ஈடுபட்டதும், தனது மனைவியுடன் தன்னை சேர்த்த வைக்க கோரி இதே காவல் துறை வயர்லெஸ் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.