
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய இன்று வாய்ப்புள்ளது. குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பொழியும் என்பதால் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று இரவு 8.10 மணி நிலவரப்படி தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், நாகை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 மணி நிலவரப்படி காரைக்காலில் 9.1 சென்டி மீட்டர் மழையும், நாகையில் 5.6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேற்கு தாம்பரத்தில் 3.8, சென்னை 3.3, அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 2.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.