விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் இயங்கி வருகிறது போன் நேரு ஆங்கில பள்ளி. இந்த பள்ளி அரசின் உத்தரவை காலில் போட்டு மிதித்ததன் விளைவு ஏழு வயது மாணவன் உயிரையும் பறித்துள்ளது. காரணம் தமிழக அரசு வரும் ஜூன் 3ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு உத்தரவை போன் நேரு பள்ளி தூக்கி எறிந்து விட்டு சில நாட்களாகவே பள்ளி முழு நேரமும் செயல் பட்டு வந்துள்ளது.
வழக்கம் போல இந்த பள்ளி வாகனங்கள் கிராம பகுதிகளுக்கு சென்று பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளது. பள்ளி நேரம் முடிந்ததும் வழக்கம் போல பிள்ளைகளை வாகனங்களில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தது பள்ளி நிர்வாகம். அதன் படி சிறு மதுரை கிராமத்தை சேர்ந்த மாயவேல் மகன் ஏழு வயதுள்ள முகுந்தன் என்ற மாணவனை அவன் வீட்டு முன்பு வாகனத்தில் இருந்து இறங்கும் போது டிரைவரின் கவனக்குறைவால் வாகனம் மாணவன் வாகனத்தின் டயரில் சிக்கி அதே இடத்தில் மரணமடைந்துள்ளான்.
இதனால் கோபமுற்ற ஊர் மக்கள் மறியல் போராட்டம் செய்தனர். அரசு உத்தரவை மதிக்காமல் பள்ளியை நடத்தி மாணவன் உயிரை பறிக்க காரணமான அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த பள்ளி நிர்வாகியை கைது செய்ய வேண்டும். இதே போல் செயல்படும் பள்ளிகளை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
போராட்டக்காரர்களிடம் அதிகாரிகள் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர்.