காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் அடுத்த ஓமக்குளம் பகுதியைச் சேர்ந்த ரவி, கீதா தம்பதிக்கு 2 மகன்களும், 1 மகளும் இருந்த நிலையில், மூத்த மகன் ஹரிகணேஷ் (13) கரோனா காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் இருக்கும் தாத்தா பாட்டி வீட்டில் தங்கி விடுமுறையை கழித்துள்ளார்.
இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் அடுத்த பாப்பாந்தோப்பில் இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற ஹரிகணேஷ், அங்கு சில சிறுவர்களுடன் சேர்ந்து வீராணநல்லூர் அருகே வடவாற்றில் குளிப்பதற்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தால் ஆற்றங்கரையில் இருக்கும் படிக்கட்டில் அமர்ந்து குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ஹரிகணேஷ் தவறி ஆற்றில் விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுவனை காணாததால் உடன் சென்றவர்கள் அருகே இருந்தவர்களை உதவிக்கு அழைத்து சிறுவனை தேடினர்.
நீண்ட நேரமாக சிறுவன் கிடைக்காததால் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு, காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்பணி வீரர்கள் சிறுவனை தேடினர். சுமார் 1 மணிநேர தேடலுக்குப் பிறகு சிறுவனின் உடலை மீட்டனர். சிறுவனின் உடலை கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, சிறுவனின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.