சுகாதாரமற்ற தொழில்களைச் செய்துவரும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்டத்தில் 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கு, சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இம்மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்களிலும் தூய்மைப் பணி செய்வோர், குப்பை பொறுக்குவோர், தோல் உரிப்பவர், தோல் பதனிடும் தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு சாதி, மதம் தடையில்லை. வருமான வரம்பு இல்லை. மாணவர்களின் வங்கிக் கணக்கில் மட்டுமே உதவித்தொகை செலுத்தப்படும். அதற்கான விண்ணப்பத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தில், உரிய அலுவலரிடம் பெற்ற பெற்றோரின் பணிச்சான்றை இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.