கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த குச்சிப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் காலை சிறுவர்கள் கைபந்து விளையாடிக்கொண்டிருந்த போது மேல்கவரப்பட்டு காலனியை சேர்ந்த நான்கு பேர் வந்து இங்கு ஏன் விளையாடுகிறீர்கள் என கேட்டு தகராறு செய்துள்ளனர். அதனால் இருதரப்பு இளைஞர்களிடையேயும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து மேல்கவரப்பட்டு காலனியில் இருந்து ஆதரவாளர்களை வரவழைத்து குச்சிப்பாளையம் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இரு சக்கர வாகனங்களை உடைத்துள்ளனர். இதில் இருதரப்பிலும் 8 பேர் காயமடைந்தனர்.

இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மோதல் சம்பவம் குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் குச்சிப் பாளையத்தை சேர்ந்த முருகன் மருமகன் தயாளன்(30) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேல்கவரப்பட்டை சேர்ந்த திவான், திவாகர், தர்மராஜ், சீதாராமன், தவசி, லெனின், சண்முகபாண்டி, தனசீலன் உள்ளிட்ட 15 பேர் மீது கொலைமுயற்சி, பொதுசொத்து சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து தர்மராஜ் என்பவரை கைது செய்தனர். இதேபோல் மேல்கவரப்பட்டு தர்மராஜ் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் குச்சிப்பாளையத்தை சேர்ந்த ரகுபதி, பன்னீர், சந்தோஷ், வடிவேல், அன்பு, தங்கராசு, எழுமலை, ஜெகன், சங்கர் சித்திரைசாவடி சேர்ந்த தயாளன் ஆகிய 10 பேர் மீது கொலைமிரட்டல், வன்கொடுமை, எஸ்.சி.எஸ்.டி.சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து தயாளன்(30) கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ளவர்களை தேடி வருகின்றனர்.