நாங்குநேரி – களக்காடு ஒன்றியத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது -
“நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக் கொடுத்ததில் 20 கோடி ரூபாய் கைமாறியுள்ளது. தொகுதிவிட்டு தொகுதி மாறி நிற்பது தலைவர்களுக்குதான் பொருந்தும். ராகுல்காந்தி, சோனியா, அழகிரி போன்ற முன்னணி தலைவர்கள் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் உள்ளூரில் ஆள் கிடைக்காமல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்தத் தொகுதியில் நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவர் வார்டு விட்டு வார்டு நின்றாலே யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். ஒரு மாவட்டத்தைத் தாண்டி வேறு மாவட்டத்திற்கு வந்து போட்டியிடுவதை நாங்குநேரி வாக்காளர்கள் விரும்பவில்லை.
இங்கே போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம். குடியிருப்பது சென்னையில். மாவட்ட தலைவர் பதவி வாங்கியது காஞ்சிபுரம் மாவட்டத்தில். தற்போது நாங்குநேரியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று காங்கிரஸ் வேட்பாளர் திட்டமிட்டுள்ளார். இவர் வெளிநாட்டில்தான் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாகவும், இதில் 200 கோடி ரூபாய் தேர்தலில் செலவழிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள்.
முன்பு இருந்த தேசிய காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை. காங்கிரஸ் கட்சி பணத்திற்கு விலை போய்விட்டது காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டால் மனு கொடுக்க சென்னைக்குதான் செல்ல வேண்டும். ஒரு முதியோர் மனு கொடுக்க வேண்டும் என்றாலும்கூட சென்னைக்குதான் செல்ல வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர் வீடு சென்னையில் எங்கு இருக்கிறது? ஆதார் கார்டு எங்கு இருக்கிறது? ரேசன் கார்டு எங்கு இருக்கிறது? என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. சாதாரண மக்கள் அவரைப் பார்க்கவே முடியாது. வெற்றி பெற்றால் நாங்குநேரியில்தான் வசிப்பேன் என்று வசந்தகுமார் வாக்குறுதி கொடுத்தார். ஆனால்.. தொகுதி பக்கமே வரவில்லை. சென்னையில் அவர் தொழிலைத்தான் பார்த்தார். இந்தத் தொகுதியில் வெற்றிபெற்ற எம்பி இன்னும் நன்றி சொல்லக்கூட ஊருக்குள் வரவில்லை. ஒருமுறை ஓட்டு போட்டு 5 வருடங்கள் கஷ்டப்படாதீர்கள்.” என்றார்.
அந்த இடத்திலேயே ஆக்ஷன்!
நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக தெற்குகாடுவெட்டி கிராமத்தில் திண்ணைப் பிரச்சாரத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மேற்கொண்டபோது, அங்கு வசிக்கும் மக்கள் “அரசுப் பேருந்து திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக பெரிதும் அவதிப்படுகிறோம். தொடர்ந்து அரசுப் பேருந்தினை இந்தப் பகுதியில் இயக்க வேண்டும்.”என்று கோரிக்கை வைத்தனர். உடனே, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை செல்போனில் தொடர்புகொண்ட ராஜேந்திரபாலாஜி, அந்த கிராம மக்களின் கோரிக்கை குறித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து கிராம மக்களும் போக்குவரத்துதுறை அமைச்சரிடம் செல்போனில் பேசினார்கள். நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் உறுதியளித்திட, கிராம மக்கள் கைதட்டினார்கள்.
ஆளும்கட்சி ஆயிற்றே! மக்கள் கேட்டதெல்லாம் உடனே கிடைத்துவிடும்! இதனை, தேர்தல் நடத்தை விதிமீறல் என்றெல்லாம் ‘சின்னப்புள்ளத்தனமாக’ யாரும் குறை சொல்லவா முடியும்?