Skip to main content

“காவலர் அனைவரும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும்” - எஸ்.பி அதிரடி உத்தரவு!

Published on 04/09/2024 | Edited on 04/09/2024
SB orders all police to have lathi

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நேற்று பெண் டி.எஸ்.பியை போராட்டக்காரர்கள் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஏழு பேரைக் கைது செய்து உள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் வாக்கி டாக்கியில் போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதில், இன்று முதல் இந்த நொடியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாரும் கையில் லத்தி இல்லாமல் இருக்கக்கூடாது. பாதுகாப்புப் பணிக்கு வரும்போது கையில் லத்தி இல்லாமல் யாரையாவது பணியில் பார்த்தால் உடனே சஸ்பெண்ட் செய்யப்படும். பிரச்சனை நடைபெறும் இடத்தில் வெறும் கையோடு பேசுவதற்கும், கையில் லத்தியோடு பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

குறிப்பாக அடிதடி போன்ற இடங்களில் வாயில் பேசிக் கொண்டிருந்தால் சரியாகவே இருக்காது கையில் லத்தி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பீட் போலீஸ், பந்தோபஸ்த் போலீஸ், பணியில் இருக்கும் எல்லா போலீஸும் நான் பார்க்கும்போது கையில் லத்தி இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது. இதுவே முதலும் கடைசியும் ஆக இருக்க வேண்டும் ஆகையால் அனைத்து டிஎஸ்பியும் ரோல் காலில் கட்டாயம் லத்திக் கொண்டு வருவதற்குப் போலீஸை அறிவுறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். 

மேலும், சீருடையில் இருசக்கர வாகனத்தில் செல்கின்ற போலீஸ் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து தான் செல்ல வேண்டும். நானே சாலையில்  போகும்போது தலைக்கவசம் இல்லாமல் யாரையாவது சாலையில்  பார்த்தால் அவர்களுக்கு உடனே வித்தவுட் தலைக்கவசம் ஃபைன் விதிக்கப்படும். டிஎஸ்பி தலைமையிலான போலீசார் எப்பொழுதும் அலர்ட் ஆகவும் தயாராகவும் இருக்க வேண்டும்.  டிஎஸ்பி அனைவரும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது கட்டாயம் காரில் ஒரு போலீஸ் வைத்திருக்க வேண்டும்” என போலீசார் மற்றும் டிஎஸ்பிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பேசியுள்ளார்.

சார்ந்த செய்திகள்