தமிழகம் கர்நாடகா ஆகிய இரு மாநில போக்குவரத்தின் முக்கிய வழித்தடமாக சத்தி மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் செல்கிறது. இதில் பண்ணாரி முதல் திம்பம் வரையிலான மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் பயணிக்கும் வாகனங்கள் வளைவுகளில் திரும்ப முடியாமல் அடிக்கடி பழுதாகி போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
இன்று காலை திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது ஏற்பட்டதால் இருமாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரிஅம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் தான் இந்த 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை அமைந்துள்ளது. இதில் இன்று காலை ஜல்லி பாரம் ஏற்றிய லாரி தாளவாடி செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. 6 வது கொண்டைஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு சாலையின் நடுவே நகரமுடியாமல் நின்றது.
இதன்காரணமாக மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன. சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரி பழுது நீக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து லாரி நகர்த்தப்பட்டு போக்குவரத்து சீரானது. இதன்காரணமாக இருமாநிலங்களுக்கிடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மலைப்பாதையில் விதிமுறைகளை மீறி கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. சோதனை சாவடியில் போலீசார் லஞ்சம் பெற்றுக் கொண்டு லாரிகளை அனுமதிப்பதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.