3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஷ் பஸ்வான், மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத ரேஷன் அட்டைகளை ரத்து செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேசன் பொருட்களின் தேவையை பெற விரும்பாதவர்கள், ரேசன் பொருட்கள் வாங்காத வசதி படைத்தவர்கள் போன்றவர்களின் ரேசன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இதனால் சமானிய மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் சட்டப்பேரவையில் இன்று, 3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என கூறினார்.
அப்போது, இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது. அதனால் 3 மாதங்களுக்கு ரேஷன் பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது என அவர் தெரிவித்தார்.