உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
வழக்கமாக தமிழகத்தில் இருமுனை போட்டியாக தேர்தல் களம் இருந்து வந்த நிலையில், தற்போது பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளதால் சில தொகுதிகள் மட்டும் மும்முனை களமாக மாறியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி 5 முறைக்கு மேல் தமிழகம் வந்து பிர்ச்சாரம் செய்து சென்றிருக்கிறார். அதேபோன்று நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தினம் தினம் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் பிரதமர் மோடி மீண்டும் தமிழ்கம் வரவிருக்கிறார்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று மாலை மதுரை வருகிறார். இதனையொட்டி அமித்ஷாவை வரவேற்று பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், “மீண்டும் மோடி! வேண்டும் மோடி! தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருக வருக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமித்ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதி புகைப்படத்தை வைத்து போஸ்டர் அடித்துள்ளனர்.
இதனை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த நிலையில், தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது போன்ற சம்பவம் ஏற்கெனவே நடந்திருந்தாலும், தற்போது தேர்தல் நேரத்திலும் அமித்ஷா புகைப்படத்திற்கு பதிலாக மீண்டும் சந்தானபாரதி புகைப்படத்தை வைத்து போஸ்டர் அடித்துள்ள பாஜகவினரை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Santhana Bharati Fan Club :) pic.twitter.com/Rxm6ye2rV6— Karti P Chidambaram (@KartiPC) April 12, 2024