Skip to main content

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் மறைவு - முதல்வர் இரங்கல்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Sankara Nethralaya Hospital founder Badrinath passed away cm condoled
மறைந்த கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத்

 

சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனரும், பிரபல கண் மருத்துவருமான எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும், புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ். பத்ரிநாத் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன். அமெரிக்காவில் உயர் படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் பத்ரிநாத் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை பல்கிப் பெருகி இன்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. இத்தகைய சேவைக்காக இந்திய அரசால் வழங்கப்படும் 'பத்மபூஷன்' விருதினையும் மருத்துவர் பத்ரிநாத் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சங்கர நேத்ராலயா மூலம் பத்ரிநாத் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா பெரும் நிதியுதவியை அந்த மருத்துவமனைக்கு அளித்ததுடன், பின்னர் தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார் என்பதன் மூலம் இத்துறையில் பத்ரிநாத் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியலாம். எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு. எஸ்.எஸ். பத்ரிநாத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்