ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த குமிட்டாபுரம் பகுதியில் இன்று பாரம்பரிய நிகழ்வான சாணியடி திருவிழா நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் கர்நாடக மாநில இளைஞர்கள் கலந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசிக்கொண்டனர்.
தாளவாடி, குமிட்டாபுரத்தில் நடைபெறும் சாணியடி திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் தீபாவளியை அடுத்த மூன்றாவது நாளில் இந்த திருவிழாவானது நடைபெறுவது வழக்கம். இதற்காக பயன்படுத்தும் சாணத்தை மக்கள் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுக் கொட்டகையில் சேமித்து வைக்க தொடங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து சேர்த்து வைக்கப்பட்ட மாட்டு சாணம் டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்டு கோவில் வளாகத்திற்கு முன் உள்ள திடலில் கொட்டி வைக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் கோவிலில் வழிபட்டவுடன் உற்சவரை கழுதை மீது ஏற்றி வைத்து தெப்பக்குளத்திலிருந்து கோவிலுக்கு வருகின்றனர். அதனையடுத்து திடலில் கொட்டி வைக்கப்பட்டுள்ள சாணத்தை இளைஞர்கள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் தூக்கி வீசிக் கொள்கின்றனர். இதனால் மக்கள் நோயின்றி வாழ்வார்கள் என அப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் காலங்காலமாக இவ்விழாவை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திருவிழாவில் பயன்படுத்தப்படும் சாணம் விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.