
நீடாமங்கலம் அருகே பெற்றோர்கள் திட்டிய ஆத்திரத்தில் நண்பர்கள் மூன்று பேர் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே கப்பலுடையான் குடியானத் தெருவைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மகன் ஆனந்த் (26), ராஜசேகரன் மகன் அசோக்குமார் (26), அண்ணாதுரை மகன் ஆசைத்தம்பி (28). இவர்கள் மூன்று பேரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்துள்ளனர். ஆனந்தும், அசோக்குமாரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் வெளிநாட்டிலிருந்து கரோனா விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். ஆனந்திற்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் பெண் பார்த்துவந்துள்ளனர்.
நண்பனுக்குத் திருமணம் நடக்கப்போவதால் மூன்று நண்பர்களும் மது அருந்தியுள்ளனர். மூவரும் மது குடிப்பதைத் தெரிந்துகொண்ட ஆனந்தின் தந்தை, கடும் கோபத்தோடு திட்டியுள்ளார். மனமுடைந்த ஆனந்த் மதுவில் விஷத்தைக் கலந்து குடித்ததாகக் கூறப்படுகிறது. நண்பன் விஷம் குடித்ததைப் பார்த்த மற்ற இருவரும், ‘நண்பனே போறான் நாம எதுக்குடா வாழனும்னு’ மற்ற இரண்டு நண்பர்களும் மதுவில் விஷத்தினைக் கலந்து குடித்துவிட்டனர்.
தகவலறிந்த உறவினர்கள், அவர்களை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஆனந்த், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். ஆசைத்தம்பியும் அசோக்குமாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நண்பர்கள் தினத்தில் எப்போதுமே ஒன்றாக இருந்த நண்பர்கள் மூவரும், ஒன்றாக உயிரை மாய்த்துக்கொள்ள மதுவில் விஷமருந்தியது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.