![sanitary workers chennai high court order government](http://image.nakkheeran.in/cdn/farfuture/ePR8pC_73bDs5WJl-rhjLTnly3PpI9_yLz-jNkrvggo/1600824620/sites/default/files/inline-images/CHENNAI%20HIGH%20COURT%202_11.jpg)
ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக்கோரிய மனுவுக்கு, மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தோழர் சட்ட மையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014- ஆம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த திட்டம் வரவேற்பு பெற்ற போதும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குவதில்லை. துப்புரவு தொழிலாளர்கள் கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்கி தூய்மை செய்யும்போது மரணம் அடைய வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
மேலும், துப்புரவு தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 80 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், இடர்படி வழங்கக் கோரி, மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பினோம். இந்த கோரிக்கையைப் பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவும், தமிழக நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, மனு குறித்து மத்திய- மாநில அரசுகள், அக்டோபர் 16- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.