புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தங்கமுருத்தி ஊராட்சிக்கு உட்பட்ட சங்கன்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக வெளியான விவகாரம் ஒன்று மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக புதுக்கோட்டை கரம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநலவழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி புதுக்கோட்டை சங்கன்விடுதி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாகப் புகார் அளித்தும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. எனவே இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏராளமான தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதை ஒட்டியும் பல்வேறு உத்தரவுகளைக் கொடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வுக்கு முன்பு கடந்த 15 ஆம் தேதி (15.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மனுதாரர் குறிப்பிடும் கிராமத்தில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஏப்ரல் 25 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் அதே பகுதியில் வசித்து வந்த இளையராஜா என்பவர் குடிநீர்த் தொட்டியில் கிடப்பது பாசியா அல்லது மாட்டுச் சாணமா எனக் கேள்வி எழுப்பி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நீரின் மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ததில் நீரில் கலந்திருப்பது பாசி என்பது உறுதி செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை இரட்டை குவளை முறை, திருமண மண்டபங்களை ஒரு சாராரைப் பயன்படுத்த விடாமல் தடுப்பது உள்ளிட்ட எவ்விதமான தீண்டாமையும் நடைபெறவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு நீதிபதிகள், “இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும். இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்துவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலகத் தயாரா?. சமூகத்தில் நிகழும் தவறுகளை தனிநபர் சுட்டிக்காட்டினால் அதனைக் களைந்து சரி செய்வதை விடுத்து சுட்டிக்காட்டிய நபர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல. மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முறையாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஒப்புகை சீட்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் சிபிசிஐடிக்கு இந்த வழக்கின் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். சிபிசிஐடி ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்த வழக்கு விசாரணை தொடர்பான நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் சண்முகம் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டிருந்த நிலையில் சங்கன்விடுதி அருகே குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகாரில் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை என முடிவுகளில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.