லால்குடி சமயபுரம் சாலையிலிருந்து சிதம்பரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை போடும் பணி தற்போது நடைபெற்று வருகிற நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கக்கூடிய பங்குனி கரையில் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெறுவதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
அதிலும் பங்குனி கரையிலிருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணலை அள்ளி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட இருக்கக்கூடிய லாரிகளில் அவற்றை நிரப்பி பன்மடங்கு விலை அதிகமாக விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.
பங்குனி கரையில் ஒட்டி இருக்கக்கூடிய கீழ வாளாடி, கீழப்பலூர், திருமங்கலம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திமுக மற்றும் அதிமுகவினர் இணைந்து கூட்டாக இந்த மணல் கடத்தலை தொடர்ந்து செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மணல் திருட்டை தடுக்க கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் சமீபகாலமாக ஒரு சில இடங்களில் மணல் திருட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எனவே அதேபோல் இந்த பங்குனி கரை பகுதியிலும் நடைபெறும் இந்த மணல் திருட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்துவார் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியதோடு எதிர்பார்த்து வருகின்றனர்.