அரசியலில் எதிரணியினர் சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கரை புதுக்கோட்டை தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு காத்திருந்து சந்தித்தார். அதனால் தி.மு.கவின் மாவட்ட தீர்மானத்தை மீறிவிட்டதாக பெரியண்ணன் அரசு மீது தலைமை வரை புகார் வாசித்துள்ளனர் உ.பிக்கள். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே புதுக்கோட்டையில் மற்றொரு சந்திப்பும் நடந்துள்ளது.
மதிமுக பிரமுகர் மாத்தூர் கலியமூர்த்தி இல்ல திருமணம் இன்று வைகோ தலைமையில் புதுக்கோட்டையில் நடந்தது. திருமண விழாவிற்கு அனைத்துக் கட்சி பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தார் கலியமூர்த்தி.
முன்னதாகவே வந்த வை.கோ திருமணத்தை முடித்தார். அப்போது முன்னாள் அமைச்சரும் தி.மு.க தெற்கு மா.செ பொறுப்பு ரகுபதி எம்.எல்.ஏ மேடையில் நின்றார். அதே நேரத்தில் வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மணமக்களை வாழ்த்த வந்தவர் அருகில் நின்ற வை.கோ விடம் நலன் விசாரித்தார். இருவரும் இன்முகத்துடன் பேசிக் கொண்டனர்.
தொடர்ந்து விழாவில் வைகோ பேசும் போது, "மாற்றுக் கட்சியாக நாங்கள் இருந்தாலும் எங்கள் இல்ல திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து கூறிய மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நன்றி" என்றார்.
வைகோவின் அருகில் நின்ற ரகுபதி ஏதும் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒருவர், "ரகுபதியை அப்பா என்று வாய்நிறைய அழைத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். அரசியல் அவர்களை பிரித்துவிட்டதால் இன்று எதிரும் புதிருமாக நிற்கிறார்கள்" என்றார். மற்றவரோ, "அது காரணம் இல்லப்பா.. ஆளுங்கட்சியான அ.தி.மு.க அமைச்சர்கள், மா.செ., எம்.எல்.ஏ, எம்.பி. யார் கூடவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உடன்பிறப்புகள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதுன்னு மாவட்ட பொறுப்பாளர்கள் ரகுபதி – செல்லப்பாண்டியன் ஆகியோர் இருந்து தான் 2 மாதம் முன் தீர்மானம் நிறைவேற்றி சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். அதனாலதான் இப்ப பெரியண்ணன் அரசுக்கு சிக்கல் வந்திருக்கு. அதே சிக்கலில் தானும் சிக்கிக் கொள்ளக் கூடாதுன்னுதான் ரகுபதி ஒதுங்கியே நிற்கிறார்" என்றார்.