புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைந்து இன்று மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. அதையொட்டி கிரண்பெடி வார இறுதிநாட்களில் ஆய்வுக்கு செல்லும் செய்திகள், படங்கள் மற்றும் கவர்னர் குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளை தொகுத்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுப்புகள் கவர்னர் மாளிகையில் நேற்று வெளியிடப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் கிரண்பேடி கூறியதாவது,
இதுவரை 163 வார இறுதி சுற்றுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். புதுச்சேரியின் கவர்னராக நான் பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதல் புதுச்சேரியின் இன்றைய மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, நிதி மேம்பாடு போன்ற அடிப்படை விஷயங்களுக்காக முன்னுரிமை கொடுத்து வந்துள்ளேன். ஏனெனில் நல்ல அஸ்திவாரங்களை கொண்டே சிறப்பான கட்டுமானத்தை நாம் உருவாக்க முடியும்.
அடுத்து 10 ஆண்டுகளுக்கு புதுச்சேரிக்கான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க குடிநீர், வேளாண்மை திறன் மேம்பாடு, கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம் கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சி, மேலாண்மை, சுற்றுலா மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளுக்கு ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்கி வளமான புதுச்சேரிக்கு வழிவகை செய்து வருகிறோம்.
அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி, பொறுப்புணர்வு மற்றும் நிலையான தன்மைக்கு ஒரு முன் உதாரணமாக புதுச்சேரி விளங்கும் என நான் நம்புகிறேன். சமூக பங்களிப்பிற்கு ஊக்கமளிப்பதாக அடுத்த மாதம் முதல் ராஜ்நிவாஸ் (கவர்னர் மாளிகை) மக்கள் மாளிகையாக திகழ உள்ளது. புதுச்சேரி மாநிலம் பல வகைகளில் தன்னிறைவு பெற்றதாகவும், வளமை பெற்றதாகவும் விளங்க மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், சமூக சேவையில் ஆர்வம் கொண்ட நிலையான தலைமை தேவைப்படுகிறது. அதற்கு புதுச்சேரியின் நலனில் அக்கறை கொண்ட பொறுப்பு வாய்ந்த குடிமகன்கள் தேவைப்படுகிறார்கள் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அதனை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு மே-30 புதன்கிழமை பிறந்த நாள் வருகிறது. அதனையொட்டி நாராயணசாமி வீட்டுக்கு சைக்கிளில் சென்ற கிரண்பேடி நாராயணசாமிக்கு ‘ஹேப்பி பர்த் டே’ என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் கிரண்பேடி புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைந்து இன்று மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. அதற்காக கிரண்பேடிக்கு நாராயணசாமியும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
எவ்வளவுதான் முட்டிக்கொண்டாலும் முதல்வரும், ஆளுநரும் பரஸ்பரம் வாழ்த்து பரிமாறிக்கொள்வதை பார்த்து பரவசமடையும் புதுச்சேரி மக்கள், இருவரும் இதுபோல் மாநில வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட்டால் நல்லது என்கின்றனர்.