திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பசுமைக்குடில் மூலம் சாகுபடி செய்யப்பட்ட சாம்பார் வெள்ளரிக்காயை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் நாள்தோறும் காய்களைப் பறித்து கீழே கொட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்
திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் நுற்றுக்கணக்கான பசுமை குடில்களில் சாம்பார் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த சாம்பார் வெள்ளரிக்காய் கேரளா மாநில பொது மக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. நாள்தோறும் பறிக்கப்படும் 100 டன் அளவிலான சாம்பார் வெள்ளரிக்காய் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக கடந்த 12 நாட்களாக கேரளாவுக்கு சாம்பார் வெள்ளரிகாயை அனுப்ப முடியவில்லை. தற்போது வெள்ளரிக்காய் சீசன் என்பதால் செடிகளில் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. இந்த காய்களை ஏற்றுமதி செய்ய மார்க்கெட் இல்லாததால் விவசாயிகள் காய்களைப் பறித்து கீழே போடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காய்களைப் பறிக்காவிட்டால் செடி அழிந்துவிடும் என்ற காரணத்தால் விவசாயிகள் வேறு வழியில்லாமல் காய்களை பறித்து வருகின்றனர்.
கடந்த காலத்தில், ஒரு கிலோ ரூபாய் 50 வரை விற்பனையான சாம்பார் வெள்ளரி, தற்போது கேட்பாரற்றுக் கிடக்கிறது. இதனால் தங்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்து இருப்பதாக கூறும் அப்பகுதி விவசாயிகள், மத்திய, மாநில அரசுகள் இதனை உடனே கவனத்திற்கொண்டு, சாம்பார் வெள்ளரிக் காய்களை கேரளாவுக்கு அனுப்புவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.