சென்னை கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (11.08.2023) காலை நடைபெற்ற "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும், காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கலந்து கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்த ஆண்டு இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தால் ஏற்படுகின்ற தீமைகளைப் பற்றி இளம் தலைமுறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதான் இந்தத் திட்டத்தினுடைய நோக்கங்கள்.
அதன் காரணமாக, தமிழ்நாட்டில் இத்தகைய குற்றச்சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து கொண்டு வருகிறது. அதற்காக, முழுவதுமாக தடுத்துவிட்டோம் என்று சொல்ல வரவில்லை. குறைந்து கொண்டு வருகிறது என்றுதான் சொல்கிறேன். இந்தளவுக்கு குறைய, அக்கறையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகின்ற காவல்துறை அதிகாரிகள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஆர்வமும், அக்கறையும் குறையாமல் செயல்பட்டு, முற்றிலுமாக போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியபோது, இது சமுதாய நலனுக்கான ஒரு சிறந்த திட்டம் என்று மருத்துவர்களும், பொதுமக்களும் வரவேற்றார்கள். போதைப் பழக்கத்தால், சீரழிந்து இருக்கின்ற மாணவர்களையும், இளைஞர்களையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும்பணி தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்று சொன்னார்கள். அவர்கள் நம்பிக்கைக்கேற்ப இந்த விஷயத்தில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. போதைப் பழக்கம் என்பது, அதைப் பயன்படுத்துகிறவர்கள் மட்டுமில்லாமல் அவர்கள் குடும்பத்தினருக்கும், சமூகத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற ஒரு கொடிய நோய்.
தனி மனிதருடைய வாழ்க்கையில் மட்டுமில்லை மாநில வளர்ச்சியிலும் மிகப்பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தும். போதைப் பொருளைச் சார்ந்திருக்கக் கூடியவர்களும், போதைக்கு அடிமையானவர்களும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பெரும் சுமையாக இருக்கிறார்கள். அதனால்தான், ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைத் தடுக்கின்ற நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாக இறங்கி இருக்கிறோம். கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து நான் பேசும்போது, 'போதைப்பொருள் விற்பனைச் சங்கிலியை உடைக்க வேண்டும்; பள்ளி, கல்லூரிகளின் அருகே போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சொன்னேன். "இந்த நடவடிக்கையில் நான் சர்வாதிகாரி போல செயல்படுவேன்" என்று கொஞ்சம் கடுமையாகவே பேசியிருந்தேன்.
அந்த அடிப்படையில் தான் அரசும் நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது. போதைப்பொருள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபடக்கூடிய யாராக இருந்தாலும், அவர்கள் மேல் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 10 ஆம் நாளன்று, முதன்முறையாக மாநில அளவிலான மாநாட்டை "போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு" என்ற கழக அமைப்பை ஏற்படுத்தி ஒரு கருப்பொருளில் நடத்தினோம். அந்த மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு போதைப் பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களை ஒழிப்பதற்கான புதிய உத்திகள் வகுக்கப்பட்டது. 2022 ஆகஸ்ட் 11 அன்று, மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, 70 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
இந்தத் திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததோடு, போதைப்பொருளுக்கு எதிரான போருக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிப்பதாக இருந்தது. நம்முடைய அரசினுடைய இந்த முயற்சிக்கு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தென் மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கிய இடங்களில் கஞ்சா விற்பனை நடந்தால், பொதுமக்கள் தகவல் தெரிவிக்க புகார் எண்களும் வெளியிடப்பட்டது. போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வழக்குகள் பதிதல், கைது, போதைப் பொருட்கள் பறிமுதல், சொத்துகள் முடக்கம் என்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
பல்வேறு போதைப் பொருள் மற்றும் உளவெறி ஊட்டும் பொருட்கள் சட்டத்தின் கீழ் பதியப்பட்டிருக்கின்ற வழக்குகளில் தொடர்புடைய முந்தைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, 2019 முதல் இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கண்காணித்து கைது செய்து கொண்டு வருகிறோம். அதோடு நிதி தொடர்பான விசாரணை, சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்குதல் போன்ற நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நிதி தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்டத்தின் கீழ் அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படுகிறது. ஆகஸ்ட் 11, 2022 முதல், 154 குற்றவாளிகளுக்கு எதிராக நிதி தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு. அவர்களிடமிருந்து 18 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கை எடுத்த டிஜிபி மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட கடைநிலைக் காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரையும் நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். உங்களுக்கு என்னுடைய சல்யூட்” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, உள்துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோட், காவல்துறை கூடுதல் இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.