கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பெரிய தேசத்தில், அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் தொடர்ச்சியாக 40 நாட்கள் ஊரடங்கு நீடிப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானதால் இரண்டாவது முறையாகத் தடை நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு செய்தபோது, சில தொழில்களுக்கு விலக்கு அளித்திருந்தது மத்திய – மாநில அரசுகள்.
அதன்படி வேளாண்மை சார்ந்த தொழில்கள், பொருட்கள் விற்பனை முதல் பல தொழில்கள், பொருட்கள் விற்பனைக்குச் சலுகை அறிவித்து கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் மதுபானக் கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டன. தமிழகத்தில் அரசே நடத்தும் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளைத் திறக்கச்சொல்லி உத்தரவிட்டு, கடைகள் திறந்த முதல்நாளே சுமார் 172 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து தமிழகத்தை அதிரவைத்துள்ளது.
இப்படி அத்தியாவசியமற்ற கடைகள் திறக்க அனுமதி அளித்த அரசாங்கம், முடிவெட்டும் கடைகளைத் திறக்க அனுமதிக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான முடிவெட்டும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
முடிவெட்டும் கடைகளை திறக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென கேட்டு திருவண்ணாமலை மாவட்டம் முடிவெட்டும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த 50 பேர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு மே 8ஆம் தேதி வருகை புரிந்தனர். அவர்கள் ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனுவைத் தந்துள்ளனர்.
அதில், கடந்த 40 நாட்களாகக் கடைகளை மூடிவைத்துள்ளோம். இதனால் எங்கள் குடும்பம் வறுமைக்குச் சென்றுள்ளது. நாங்கள் ஏழை தொழிலாளர்கள், நாங்கள் முடிவெட்டும் கடைகளை வாடகை இடத்தில் தான் வைத்துள்ளோம். கடைகளைத் திறக்கவில்லை. ஆனால் நாங்கள் வாடகை கட்ட வேண்டியுள்ளது. இல்லையேல் கடையைக் காலி செய்யச்சொல்கிறார்கள். ஏற்கனவே வறுமையில் உள்ள எங்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் எங்களது நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாகக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும். எங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் முடிவெட்டும் சவரத்தொழிலாளி ஒருவர், வறுமையால் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது.