விருதுநகர் அருகே உள்ள முத்துசாமி புரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்துவந்த நிலையில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரில் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும் போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.
மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் உரிய நிவாரணத் தொகை உடனடியாக வழங்கும்படி, இந்த திமுக அரசை வலியுறுத்துவதுடன், நான் ஏற்கெனவே பலமுறை வலியுறுத்தியபடி தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என்பதை இந்த அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில் தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது.