Skip to main content

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!

Published on 09/12/2018 | Edited on 09/12/2018


பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் செய்தி நிறுவனம் சார்பில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்குவது குறித்து, பெண் உறுப்பினர்களின் அரசியல் பணிகள், நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றி நீண்ட ஆய்வுகளை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது, திமுகவின் மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.

 

 Best Member of Parliament for Kanimozhi

 

லோக்மட் செய்தி நிறுவனத்தின் தலைவரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜய் தர்தா, " லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகின்றன. 

 

அந்த வகையில் மாநிலங்களவையின் 2018 ஆம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு  டெல்லி, அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள்  விருதுகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

 

நாடாளுமன்றத்தில் கனிமொழி அவர்கள் கடந்த பத்தாண்டுகளாக  மகத்தான பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலுசேர்த்ததற்காகவும், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. அவரதுநாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக உந்து சக்தியாகவும் திகழ்ந்து ஜனநாயகத்துக்கான நேர்மறையான பங்களிப்புகளை முன்னெடுத்துச் செல்கின்றன. உங்களுக்கு விருது அளிப்பதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்திட வாய்ப்பு அமைந்ததற்கு லோக் மட் செய்தி நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

லோக்மட் செய்தி நிறுவனம் வழங்கும் நாடாளுமன்ற விருதுகளை பத்து பேர் கொண்ட மூத்த நாடாளுமன்றவாதிகள் குழு இந்த வருடம் தேர்ந்தெடுத்திருக்கிறது.

 

 டாக்டர் முரளி மனோஜர் ஜோஷியை  தலைவராகக் கொண்ட விருதுகள் தேர்வுக் குழுவில், பேராசிரியர்  சௌகதா ராய், டாக்டர் ஃபரூக் அப்துல்லா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, பிரஃபுல் படேல், டி.ராஜா, ஹரிஸ் குப்தா, ராஜத் சர்மா, மற்றும் லோக் மட் நிறுவனத்தின்  தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாடாளுமன்ற பிரதிநிதிகள்  இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.