நீலகிரியில் தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று தவித்து வரும் நிலையில் அதனை தாயுடன் சேர்க்க வனத்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மசனகுடியில் இருந்து மாயார் செல்லக்கூடிய சிக்கம்மன் கோவில் அருகே குட்டியானை ஒன்று வனத்தை ஒட்டிய சாலை ஓரத்தில் அலைந்து கொண்டிருந்தது. முதுமலை அடர் வனப்பகுதியாக கருதப்படும் அந்த பகுதியின் சாலையில் வாகனத்தில் வந்த பொதுமக்கள் குட்டி யானை தனியாக நின்று கொண்டிருந்ததை கண்டனர். தொடர்ந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. உடனடியாக இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானையை தாய் பிரிந்து தனியாக இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து சுற்றுவட்டாரப் பகுதியில் தாய் யானை இருக்கிறதா என தேடியபோது யானைகள் எதுவும் தென்படவில்லை. உடனடியாக ட்ரோன் கேமராக்கள் கொண்டுவரப்பட்டு அருகில் வேறு ஏதேனும் யானை கூட்டம் உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.