சேலத்தில் குடும்பம் நடத்த வர மறுத்த இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த கணவனை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை கங்காபுதூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் மோகனேஸ்வரி (21). இவருக்கும், அல்லிக்குட்டை அருகே உள்ள மன்னார்பாளையத்தைச் சேர்ந்த கோபி (26) என்பவருக்கும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கோபி, கட்டட வேலைக்குச் சென்று வருகிறார். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் சிபு என்ற ஆண் குழந்தை உள்ளது.
பெற்றோர் எதிர்ப்பை மீறி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட மோகனேஸ்வரி, கோவையில் குப்பையாபாளையத்தில் கணவருடன் வசித்து வந்தார். கோபிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த இரு மாதங்களுக்கு முன் மோகனேஸ்வரி சேலத்தில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்குக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். பின்னர் அவர், சேலம் ராஜகணபதி கோயில் அருகே உள்ள ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ் ஜவுளி கடையில் வேலைக்குச் சென்று வந்தார்.
இதற்கிடையே கோபி, பலமுறை நேரிலும், செல்போன் மூலமும் மோகனேஸ்வரியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மோகனேஸ்வரி ஒத்து க்கொள்ளவில்லை.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) இரவு 9 மணியளவில், மோகனேஸ்வரி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டை நோக்கி அவர் தார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் மறைந்து இருந்த கோபி, திடீரென்று அவரை வழிமறித்து, தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது.
ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கோபி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகனேஸ்வரியை கழுத்து அறுத்துக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதையடுத்து சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு கோபி தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மோகனேஸ்வரியின் தந்தை ராமலிங்கத்திடம் தகவல் அளித்தனர். அவர், இதுகுறித்து வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சனிக்கிழமை (நவ. 9) கோவையில் தான் வேலை செய்து வரும் இடத்தில் இருந்து சம்பளத்தை வாங்கிக்கொண்டு, எப்படியும் மனைவியை சமாதானம் செய்து கோவைக்கு அழைத்து வந்து விடுவேன் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு சேலம் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு அவர் மது குடித்துள்ளார். அதன்பிறகே மனைவியை வழிமறித்து சமதானம் பேசியிருப்பதும், அப்போதும் மோகனேஸ்வரி முரண்டு பிடித்ததால் ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. கோபியை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வீராணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.