இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இப்படி ஒரு கொடூர தாக்குதலை கண்டு இந்திய நாடு பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது. அதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் நகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் இருக்கக்கூடிய பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் பாக் தீவிரவாத அமைப்பை கண்டித்து போராட்டம் நடத்தியும் வருகிறார்கள்.
அதுபோல் வீரமரணம் அடைந்த நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு அங்காங்கே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அமைதி ஊர்வலங்களை நடத்தியும்,மெழுகுவர்த்தி ஏற்றிஅஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள். அதுபோல் கோவில்கள்,மசூதிகள், சர்ச்சுகளில் வீரமரணமடைந்த நமது இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக கூட்டுப் பிரார்த்தனையும் கூட மும்மதத்தினரும் ஜாதி மதம் பார்க்காமல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் துணை முதல்வர் ஓபிஎஸ் சின்சொந்த மாவட்டமான தேனியில் வழக்கம்போல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நடத்தினார். இக்கூட்டத்திற்கு வழக்கம்போல் மாவட்ட அளவில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுக்க கோரி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம்மனு கொடுப்பது வழக்கம் அதுபோல் மனு கொடுத்தனர்.
அப்பொழுது இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட லட்சுமிபுரம் அருகே இருக்கும் சரத்துப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த கூலி தொழிலாளியான பொன்னையன் பாக். தீவிரவாதிகளால் வீரமரணமடைந்த நமது இந்திய ராணுவ வீரர்களுக்காக ஆயிரம் ரூபாய் நிதியை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் வழங்கினார். அதை கண்டு கலெக்டர் உள்பட அதிகாரிகள் அனைவரும் அந்த கூலித்தொழிலாளியின் பெருந்தன்மையை பாராட்டினார்கள்.
இதுபற்றி சரத்துப்பட்டி எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த பொண்ணையனிடம் கேட்டபோது... கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளால் நமது ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு மனம் நொந்து போய்விட்டேன். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அந்த வீரர்களின் குடும்பத்திற்கு என்னால் முடிந்த உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதைப்பற்றி எனது மனைவி கம்மாளச்சியிடம் சொன்ன போது அவரும் உதவி செய்யுங்கள் என்று கூறினாள். ஆனால் எனக்கு ஐந்து பிள்ளைகளில் மூன்று ஆண் இரண்டு பெண் பிள்ளைகளில் ஐந்து பேரையுமே திருமணம் செய்து கொடுத்து விட்டு நானும் என் மனைவியும் தனியாக எம்ஜிஆர் காலணியில் இருந்துகொண்டு தினசரி 270 ரூபாய் வீதம் கூலி வேலைக்கு போய் வருகிறோம். அந்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தும் வருகிறேன். இப்படி கூலிவேலைக்குச் சென்று அதில் மிச்சப்படுத்தி வைத்து இருந்த பணம்தான் ஆயிரம் ரூபாய். அந்த பணத்தைதான் மாவட்ட கலெக்டரிடம் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியாக வழங்கினேன் என்று கூறினார்.
இப்படி கூலித்தொழிலாளியான பொன்னையன் மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்ததை கண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களும், அதிகாரிகளும் கூட பொன்னையனின் மனிதாபிமானத்தை கண்டு வாழ்த்தினார்கள்.