பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவருக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவி உள்ளார். வெங்கடேசன், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிபுரிந்து வந்த அதே பள்ளியில், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த தீபா (42) என்ற கணித ஆசிரியரும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 15ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற வெங்கடேசனும், தீபாவும், மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதில் பதற்றமடைந்த வெங்கடேசனின் மனைவி காயத்ரி, இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே போல், தீபாவின் கணவரான பாலமுருகன் வி.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கோவை நகரில் நின்ற தீபாவின் காரை காவல்துறையினர் கண்டுபிடித்து சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில், தீபாவின் தாலி, 2 குண்டு, தீபா மற்றும் வெங்கடேசன் ஆகியோரின் செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், ரத்தக்கறை படிந்த சுத்தியல், அரிவாள் போன்ற ஆயுதங்களை கைப்பற்றினர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். ஆனால், ஆசிரியர்கள் 2 பேரை பற்றி எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
இதனிடையே, குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசனின் உறவினர்கள் சிலர் தேனிக்கு சென்று வெங்கடேசனை கண்டுபிடித்து அவரது சொந்த ஊரான குரும்பலூருக்கு அழைத்து வந்து பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியனுக்கு ரகசியமாக தகவல் கொடுத்து குரும்பலூருக்கு வருமாறு கூறினர். ஆனால், எஸ்.எஸ்.ஐ பாண்டியன் அவர்களிடம் மறுநாள் ஸ்டேசனுக்கு வெங்கடேசனை அழைத்து வரும்படி அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த வெங்கடேசன் குரும்பலூரில் இருந்து தப்பி சென்றுள்ளார். அதே போல், தீபாவின் கணவர் வி.களத்தூர் போலீஸ் ஸ்டேசனில் கடந்த மாதம் 18ஆம் தேதி புகார் கொடுத்தும், வி.களத்தூர் எஸ்.எஸ்.ஐ முஹமது ஜியாவுதீன் வழக்குப்பதிவு மட்டும் செய்துவிட்டு தேடும் பணியை துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருந்துள்ளதாக தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி கவனத்துக்கு தனிப்படை போலீசார் கொண்டு சென்றனர். இதையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்ததாக பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியன், வி.களத்தூர் எஸ்.எஸ்.ஐ முஹமது ஜியாவுதீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.ஷ்யாம்ளாதேவி அதிரடியாக நேற்று (21-12-23) உத்தரவிட்டார்.