Skip to main content

வஉசி பூ மார்க்கெட்டில் நடப்பது என்ன? விசாரணை நடத்த தனி வழக்கறிஞரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 14/02/2021 | Edited on 14/02/2021

 

salem voc market chennai high court appointed the lawyer


சேலம் போஸ் மைதானத்தில் தற்காலிகமாக வஉசி பூ மார்க்கெட் அமைக்கப்பட்டு உள்ளது. கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவரின் ஆதரவாளர் முருகன் என்பவர் பூ மார்க்கெட்டில் சுங்கம் வசூல் ஒப்பந்தம் எடுத்துள்ளார்.

 

மாநகராட்சி நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதற்கு உரிய ரசீது கொடுக்கப்படுவதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒப்பந்ததாரர் தொடர்ந்து சுங்கம் வசூலிக்க உடனடியாக தடை விதித்ததோடு, மாநகராட்சி நிர்வாகமே பிப். 22- ஆம் தேதி வரை சுங்கம் வசூலிக்க வேண்டும் எனவும், அன்றாட வசூல் விவர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

salem voc market chennai high court appointed the lawyer

இதற்கிடையே, உயர்நீதிமன்றம், வஉசி பூ மார்க்கெட்டில் சுங்கம் வசூல் தொடர்பாக நடக்கும் உண்மையான கள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுரேஷ் என்ற வழக்கறிஞரை நியமித்தது. அதன்படி, வழக்கறிஞர் சுரேஷ், சனிக்கிழமை (பிப். 13) சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் நேரில் விசாரணை நடத்தினார். சுங்கம் வசூலுக்கு ஒப்பந்ததாரர்கள் கொடுத்து வந்த ரசீதுகளையும் ஆய்வு செய்தார். 

 

நேரடி விசாரணையின்போது, பூ வியாபாரிகள் பலர், பூ மூட்டை ஒன்றுக்கு மாநகராட்சி நிர்வாகம் 60 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் ஒப்பந்ததாரர் 100 ரூபாய் வசூலித்தார் என்று கூறினர். இது தொடர்பான முழுமையான கள நிலவரம் குறித்த அறிக்கை, விரைவில் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வழக்கறிஞர் சுரேஷ், பூ வியாபாரிகளிடம் கூறினார்.
 

 

சார்ந்த செய்திகள்