கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில், வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.
சேலம் உடையாப்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்றிதழ் வாங்குவதற்காக, வெள்ளிக்கிழமை (பிப். 21) காலை கரூரில் இருந்து மினி வேன் ஒன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி வழியாக உடையாப்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தது. கிச்சிப்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றபோது திடீரென்று அந்த வாகனத்தின் முன்பக்க இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதை கவனித்த ஓட்டுநர், உடனடியாக சாலையோரம் வேனை நிறுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் தீ வேகமாக பற்றி எரியத் தொடங்கியது.
இந்த தீவிபத்தில் வேன் ஓட்டுநருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. வேன் தீப்பிடித்து எரிவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். மணலைக் கொட்டியும் தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். என்றாலும், மின் வேன் முற்றிலும் தீயில் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. இச்சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.