தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
காத்திருப்பு போராட்டத்தில் "மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தை அருதியிட்டு குறிப்பிட்ட தேதியில் காலைநேரத்தில் நடத்திட வேண்டும், இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ரயில் பாஸ், பஸ் பாஸ், பாதுகாவலர் பாஸ், உள்ளிட்டவைகளை வழங்கும் வகையில் மருத்துவர்களும் மற்ற அனைத்து துறை அதிகாரிகளும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்திட வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக ஆடு, மாடுகள் இந்திரா குடியிருப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு மணி நேர வேலை மட்டுமே தந்து அதோடு முழுமையான ஊதியத்தையும் வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை வழங்கவேண்டும். வங்கி கடன் வழங்கும் போது வங்கி மேலாளர்கள் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்காமல் குறித்த நேரத்தில் கடன் வழங்க வேண்டும்," என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் கலந்து கொண்டனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் ஒருவரை அனுப்பி பேச்சுவார்த்தைக்கு வரசொல்ல சொல்லி அனுப்பியிருக்கிறார். அந்த ஊழியரும் மாற்றுதிறனாளிகளிடம் வந்து அழைத்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளோ, கோட்டாட்சியர் அலுவலகத்தின் வாசலில் தான் போராடுகிறோம். அவர் இருக்கும் மேல் தளத்திற்கு வரமுடியாமல் தான் கீழே நின்று போராடுகிறோம். அவரு வந்து எங்க குறையை கேட்ககூடாதா என கூறி அனுப்பிவிட்டனர். ஆர்,டி,ஓவும் கீழே இறங்கி வந்து மனு வாங்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளின் மாநில துணைத் தலைவர் கணேசன் கூறுகையில், "சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி காத்திருப்பு போராட்டம் செய்தோம்.
அப்போது கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அழைத்ததின் பேரில் வந்தோம். ஆனால் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முதல் தளத்தில் செயல்படுவதால் மாற்றுத்திறனாளிகள் அதிகாரியை சந்திக்க லிப்ட் வசதி சாய்வு தள பாதையோ எவ்வித வசதியும் இல்லாமல் இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் கீழே இருப்பதாக குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்த கோட்டாட்சியரை சந்தித்து பொறுப்பாளர்கள் கோரிக்கையை கொடுக்க கீழே இருக்கிறார்கள் என்று சொன்னோம். ஆனால் மாற்றுத்திறனாளிகளை அலட்சியப் படுத்தும் நோக்கில் அவர்கள் வரவேண்டாம் நீங்கள் என்ன என்று பேசுங்கள் எனஅலட்சியப்படுத்தும் நோக்கில் கீழே இறங்கி வர மனமில்லாமல் அவர்களை போகச் சொல்லுங்கள் உங்களிடம் பேசுகிறேன், என்று சொன்னார்.
அதற்கு ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தரை தளத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளை சந்தித்து மனுக்களைப் பெற்று வரும் 22 ஆம் தேதி அனைத்து அலுவலர்களையும் சம்மபந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்துள்ளார்.