பிற மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு கஞ்சாவை கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் வேளையில் இதனைத் தடுக்க ரயில்களில் ரயில்வே காவல்துறையினர் அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். எனினும், ரயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்த போது அங்கு பணியில் இருந்த சேலம் ரயில்வே காவல்துறை எஸ்.ஐ. பாலமுருகன் தலைமையில் காவலர்கள் நேற்று காலை தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காவல்துறையினர் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ரயிலின் பின் பகுதியில் உள்ள முன்பதிவில்லா ரயில் பெட்டியில் ஒன்றில் சோதனை நடத்தியபோது, பயணிகள் பார்சல்களை வைக்கும் இடத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது தெரியவந்தது.
சந்தேகமடைந்த போலீசார் அந்த பையை சோதனையிட்டதில் அதற்குள் 10 கிலோ கஞ்சா 5 பொட்டலங்களில் இருப்பது தெரிய வந்தது. கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர்கள், காவல்துறையினர் சோதனை செய்து வருவதை அறிந்து தப்பிச் சென்று விட்டது விசாரணையில் தெரிய வந்தது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கஞ்சாவை காவல்துறையினர், போதைப்பொருள் தடுப்பு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். போதைப்பொருள் தடுப்பு காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார் என்றும், எங்கு இருந்து எங்கே கடத்தப்படுகின்றன என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் வழியாகச் சென்ற பயணிகள் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .