சிகிச்சை பலனின்றி மருந்துவமனையில் இறந்த மனைவி உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல அரசாங்க அமரர் ஊர்தி கொடுக்காததால் தோழில் தூக்கிச் சென்றார் கணவர் என்ற செய்தியை சில மாதங்களுக்கு முன்பு செய்தித்தாள்களில் படித்தோம். இது நடந்தது வடமாநிலம் ஒன்றில்.
ஆனால் தமிழகத்தில் அதுவும் தஞ்சாவூரில் ஆதரவற்ற ஒரு பெண் இறந்து கிடந்தார் என்பதை பொதுமக்கள் மூலம் அறிந்த போலிசாரும் மாநகராட்சி நிர்வாகமும் அந்த உயிரற்ற உடலுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மறந்து சடலம் ஏற்றும் வாகனத்தில் ஏற்றாமல் மாநகர குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற கொடுமை நடந்துள்ளது.
தஞ்சை நகரின் மையமான பகுதி ஆற்றுப்பாலம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள் செல்லவும் பேருந்து நிறுத்துமிடம். அந்த பாலத்தின் நடைபாதையில் பல நாட்களாக படுத்திருந்த ஆதரவற்ற அந்த பெண் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். யார் அவர் என்பது யாருக்கும் தெரியவில்லை.. நடை பயிற்சிக்கு சென்றவர்கள் பெண்ணின் சடலம் கிடப்பதை காவல் நிலையத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்தனர். காலையில் சொன்ன தகவலுக்கு மதியம் வந்த சில போலிசார் மாநகராட்சி ஊழியர்களிடம் பேசி குப்பை வாகனத்தை வரச் செய்து பெண்ணின் உடலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டு சென்றுவிட்டார்கள். அதன் பிறகு வந்த மாநகராட்சி ஊழியர்கள் ஆதரவற்ற பெண்ணின் சடலத்தை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்று மருத்துவக்கல்லூரி மருத்துமனை சவக்கிடங்கில் போட்டுள்ளனர்.
இதைப் பார்த்த ஒரு தோழர்.. புதுக்கோட்டையில் ஆலங்குடி கணேசன் வறுமையில் போனாலும் ஆதரவற்ற சடலங்களை சொந்த செலவில் தனது காரில் ஏற்றிச் சென்று மருத்துமனையிலோ அல்லது மருத்துவமனையிலிருந்து இடுகாட்டிற்கோ கொண்டு சென்று அடக்கம் செய்கிறார்.
அதே போல புதுக்கோட்டை குழந்தைகள் மருத்துவர் ராமதாஸ் ஆதரவற்றவர்களின் சடலங்களை உரிய மரியாதைகள் செய்து சொந்த செலவில் அடக்கம் செய்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவர்களை பாராட்டி தோழர் நல்லக்கண்ணு விருது வழங்கியதுடன் இது போன்ற மனித நேயமுள்ளவர்கள் நம் நாட்டுக்கு நிறைய வேண்டும் என்றும் அவர்களுக்கு விருது வழங்கியதில் இத்தனை வயதில் ஆனந்தமடைவதாக சொன்னார்.
ஆனால் அதற்கு நேர் எதிராக தஞ்சையில் கொடுமை நடந்திருக்கிறது. இதற்கு உரிய விசாரனை செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பல இடங்களில் மனிதநேயம் வாழ்கிறது. சில இடங்களில் இப்படித்தான் சாகிறது.