சிதம்பரம் நகரில் உள்ள காரைக்காட்டு சொக்கலிங்கம் தெருவில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மகள் ஜனுஷிகா (8). சிதம்பரம் அருகே வயலூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஜனுஷிகா 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஜம்புலிங்கம் இன்று காலை தனது மகளை பள்ளியில் கொண்டு விடுவதற்காக பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
சிதம்பரம் அருகே சிலுவைபுரம் புறவழிச் சாலையின் மேம்பாலத்தின் கீழே பைக் சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தவறி கீழே விழுந்த ஜனுஷிகாவின் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சிறுமி ஜனுஷிகா மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை ஜம்புலிங்கத்திற்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ஜம்புலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஜனுஷிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் பணிகளை செய்வதாலேயே இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.