அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், மார்ச் மாத தொடக்கத்திலேயே வெப்பம் தகிக்க தொடங்கி இருக்கிறது.
கோடைக்காலங்களில், வெயிலில் நின்றபடி பணியில் ஈடுபடும் போக்குவரத்துக் காவலர்களுக்கு உடல் சூட்டைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் மோர் அல்லது எலுமிச்சை பழச்சாறு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பே, சேலம் மாநகர காவல்துறையில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு சோலார் தொப்பி, கூலிங்கிளாஸ், மோர் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த இந்நிகழ்ச்சியில், துணை ஆணையர்கள் தங்கதுரை, செந்தில், உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆணையர் செந்தில்குமார் கூறுகையில், ''கோடைக் காலங்களில் போக்குவரத்துக் காவலர்களுக்கு நீர்மோர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாநகரில் 125 போக்குவரத்துக் காவல்துறையினருக்கு சோலார் தொப்பி, கண் பாதுகாப்புக்கு கூலிங் கிளாஸ் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோடை முடியும் வரை அவர்களுக்கு நீர் மோர் அல்லது எலுமிச்சை பழச்சாறு வழங்கப்படும்,'' என்றார்.