சிறுமிகள் மீதான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, குண்டர் சட்டமும் பாயும் என்று சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் எச்சரித்துள்ளார்.
சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், கடந்த 14ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறை தரப்பிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கள்ளச்சாராயம் ஒழிப்பு, போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டுவரும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.
தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுவந்த ரவுடிகள் உருட்டு குமார், இளங்கோ, மகேந்திரன், ரஞ்சித்குமார், பெரியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரோனா ஊரடங்கு காலத்தில், சேலம் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக இதுவரை 1,193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,229 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானம் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் இதுவரை 58 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர் ஒருவார காலத்திற்குள் அவர்களாகவே காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைப்போர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் வாயிலாக 21 மனுக்கள் பெறப்பட்டு, 15 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. பெண்கள், உதவி மையத்திற்கு வந்துவிட்டால், அவர்களைத் திருப்பி அனுப்பாமல் வேறு துறை தொடர்பான கோரிக்கையாக இருந்தாலும் அம்மனுக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறோம்.
இளைஞர்கள், சிறு வயதில் காதலிப்பது தவறு என்பது தெரியாமல் காதலிக்கிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு சேலம் மாவட்டத்தில் 250 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிகளைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றுவது, சிறுமிகளைத் திருமணம் செய்வது ஆகியவை குற்றங்கள் ஆகும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவோர் மீது போக்சோ என்ற சிறப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயவும் வாய்ப்புகள் உள்ளன.
குற்றங்களைக் கட்டுப்படுத்த, சேலம் மாவட்டத்தில் 665 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதேபோல் விரைவில் இ-பீட் முறை அமல்படுத்தப்பட உள்ளது.” இவ்வாறு எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் கூறினார்.