ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து அறநிலையத்துறை சார்பில் அரசு கலைக்கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி பேசும் போது ... ‘’ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு கல்லூரியோ, அரசு உதவி பெறும் கல்லூரியோ இல்லை. அதனால் என் தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழனி அல்லது திண்டுக்கலுக்கு சென்று படிக்க கூடிய சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள்.
எனது தொகுதியில் கல்லூரி கட்டுவதற்கான போதுமான இடங்கள் இருக்கிறது. எனவே வருகிற காலங்களில் இந்து அறநிலையத்துறை அமைச்சரோடு கலந்து பேசி இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட ஒரு இடத்தில் ஆண்கள் கலைக்கல்லூரியோ, பெண்கள் கலைக்கல்லூரியோ அல்லது இருபாலரும் படிக்க கூடிய கலைக்கல்லூரியோ ஏற்படுத்தி தர உயர் கல்வி துறை அமைச்சர் முன் வருவார்களா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் பதிலளித்த உயர்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனோ, உறுப்பினர் அவர்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மூலமாக கூடுதலாக அரசு உதவி பெறும் கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறார். எனவே இந்து அறநிலையத்துறை அமைச்சரோடு கலந்து ஆலோசித்தும் அதே நேரத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் ஆலோசனை செய்து வரக்கூடிய காலங்களில் அது குறித்து ஆய்வு செய்து அந்த பகுதியில் மாணவர்கள் சேர்க்கைக்கு உண்டான வழிவகைகளை அரசு செய்யும் என பதில் அளித்தார்.
இப்படி தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்காக அரசு கலைக்கல்லூரி வேண்டும் என சட்டசபையில் எம்எல்ஏ சக்கரபாணி குரல் கொடுத்ததை கண்டு தொகுதி மக்களே எம்எல்ஏ சக்கரபாணியை பாராட்டியும் வருகிறார்கள்.