Skip to main content

இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்த ஒருதலைக்காதலன்! திருமணத்திற்கு மறுத்ததால் கொன்றதாக கடிதத்தில் வாக்குமூலம்! 

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

 

சேலத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து இளம்பெண்ணை கழுத்து அறுத்துக்கொலை செய்த ஒருதலைக்காதலன், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

s


சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சோனா பொறியியல் கல்லூரி அருகே பாண்டியராஜன் என்பவர் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சூரமங்கலம் ஆசாத் நகரைச் சேர்ந்த ஷெரீன் சித்தாரா பானு (25) என்பவர், கடந்த நான்கு மாதங்களாக வேலை செய்து வந்தார். 


வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5, 2019) காலை, 11 மணியளவில் அந்த குளிர்பான கடையில் இருந்து திடீரென்று ஒரு பெண்ணின் பயங்கர அலறல் சத்தம் கேட்டது. அருகில் இருந்தவர்கள் பதற்றத்துடன் அந்த கடையை நோக்கி ஓடிச்சென்றனர். அதற்குள் கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், கடையின் ஷட்டர் கதவை இழுத்து உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.


ஏதோ விபரீதம் நிகழ்ந்து விட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து வந்தனர். அவர்கள் கதவைத் தட்டியும் உள்ளே சென்ற மர்ம நபரோ, அங்கிருந்த ஷெரீன் சித்தாரா பானுவோ கதவைத் திறக்கவில்லை. 

 

p


சிறிது நேரத்தில் உள்ளே இருந்த பெண்ணின் அலறல் சத்தமும் நின்று போனது. இதையடுத்து காவல்துறையினர் ஷட்டர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஷெரீன் சித்தாராபானு கழுத்து, வயிறு, கைகளில் அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். உள்ளே சென்ற மர்ம நபரும் தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்தார்.


முதலில் அந்த மர்ம நபரின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


விசாரணையில், கடைக்குள் சென்ற மர்ம நபரின் பெயர், இனாமுல்லாஹ் (54) என்பதும், சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. கல்லூரிக்கு எதிரிலேயே இந்த சம்பவம் நடந்ததால், சிறிது நேரத்தில் மக்களும், மாணவர்களும் கூட்டமாக கூடிவிட்டனர். அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதுகுறித்து தகவல் அறிந்த, கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கடையை முற்றுகையிட்டனர். செய்தி சேகரிக்கச்சென்ற பத்திரிகை, டிவி சேனல்களின் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களை உள்ளே செல்ல விடாமல் மிரட்டினர். கொல்லப்பட்ட பெண்ணின் சடலத்தை எடுக்க விடாமல் காவல்துறையினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மேலும் பதற்றமான சூழல் உருவானது.


நீண்ட நேரத்திற்குப் பிறகு காவல்துறையினர், பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


காவல்துறையினர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்ட ஷெரீன் சித்தாரா பானு திருமணமாகி கணவருடன் விவாகரத்து பெற்றவர். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதேபோல் கொலையாளி இனாமுல்லாவும் மனைவியை விவாகரத்து செய்திருந்தார். 


இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே நெருங்கிப் பழகி வந்துள்ளனர். பலமுறை அவர்கள் இருவரும் உடல் அளவிலும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், இனாமுல்லா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சித்தாராபானுவை கடந்த சில மாதங்களாக வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சித்தாராபானு மறுத்துள்ளார். 


இதனால் விரக்தி அடைந்த இனாமுல்லா அவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். அந்தத் திட்டத்துடன் வெள்ளிக்கிழமையன்று கடைக்குள் புகுந்த இனாமுல்லா, கத்தியால் சித்தாராபானுவை கழுத்து, கைகளில் அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் பயந்து தானும் அதே கடைக்குள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.


இந்த சம்பவத்திற்கு முன்பாக கொலையாளி, காவல்துறைக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்திருப்பதும் தெரிய வந்தது. 5 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், 'ஷெரீன் சித்தாராபானுவுக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. என்னுடன் ஏற்பட்ட பழக்கத்திற்குப் பிறகு, சித்தாரா அவருடைய கணவரை விவாகரத்து செய்து விட்டார். 


நாங்கள் இருவரும் நான்கு வருடமாக பழகி வருகிறோம். இரண்டு வருடமாக எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பும் உள்ளது. எங்கள் இருவருக்கும் இருக்கும் பழக்கம், எல்லோருக்கும் தெரியும். இதனால் நான் என் குடும்பத்தை இழந்தேன். எல்லாவற்றையும் இழந்தேன்.


என் சகோதரர்களும் என்னை ஒதுக்கிவிட்டனர். நான் அனாதைபோல இருக்கிறேன். இந்நிலையில்தான் சித்தாராவை திருமணம் செய்து கொண்டு, புது வாழ்க்கை வாழலாம் என முடிவு செய்தேன். என் விருப்பத்தை அவரிடம் கூறி, 10 பக்கம் கடிதம் எழுதி கொடுத்தேன். பதிலுக்காக பத்து நாள்கள் காத்திருந்தேன்.  ஆனால் அவர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனால் அவளை கொலை செய்துவிட்டு, நான் என் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன்,' என்று கூறியுள்ளார்.


கடிதத்தின் இறுதியில், 'இப்படிக்கு கொலைகாரன், தற்கொலைகாரன்,' என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் சூரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
 

சார்ந்த செய்திகள்