
சேலத்தில், கடன் பணத்தை திருப்பித் தராததால் ஆத்திரம் அடைந்த கறிக்கடைத் தொழிலாளி, உறவினரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பட்டைக்கோயில் குமரன் தெருவைச் சேர்ந்தவர் சாந்தாராம் (30). செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
சேலம் குகை லட்சுமி காலனியைச் சேர்ந்தவர் கோபிநாத் (38). வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரும் சாந்தாராமும் உறவினர்கள். இவருடைய மனைவி கமலா. இவர்களுக்கு மஞ்சுபாஷினி (18), தர்ஷினி (16), லாவண்யா (10) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். மஞ்சுபாஷினிக்கு, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. மற்ற இரு மகள்களும் படித்து வருகின்றனர்.
சாந்தாராமும், கோபிநாத்தும் உறவுக்காரர்கள். கோபிநாத் குடும்பச் செலவுகளுக்காக அடிக்கடி சாந்தாராமிடம் கைமாற்றாக கடன் பெற்று வந்துள்ளார். இப்படி பல தவணைகளில் 40 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்த தொகையை சாந்தாராம் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணம் வாங்கிய கோபிநாத், சாந்தாராமை தாக்கியுள்ளார். பணத்தை தராததோடு, தன்னை தாக்கவும் செய்ததால் ஆத்திரம் அடைந்த சாந்தாராம், கோபிநாத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இதையடுத்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பலவாணர் தெரு அருகில் கோபிநாத் புதன்கிழமை (டிச. 12) காலை 10 மணியளவில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது சாந்தாராம் அங்கு சென்றார். இவரை பார்த்ததும் கோபிநாத் அங்கிருந்து தப்பி ஓடினார்.
ஆனாலும் அவரை விடாமல் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்ற சாந்தாராம், இறைச்சி வெட்டும் கத்தியால் கோபிநாத்தை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபிநாத்தை அங்கேயே விட்டு விட்டு, செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் சாந்தாராம் கத்தியுடன் சரண் அடைந்தார். கோபிநாத்துக்கு தலை, கழுத்து, முகம், மார்பு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த கோபிநாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குமார் (அன்னதானப்பட்டி), சரவணன் (சேலம் டவுன்) ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.